ராஜகுளிப்பேட்டையில் 116 வீடுகள் தயார் குலுக்கல் முறையில் பெற விண்ணப்பிக்கலாம்
சென்னை:'செங்கல்பட்டு, ராஜகுளிப்பேட்டையில், 116 வீடுகளை குலுக்கல் முறையில் பெற, வரும், 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என, வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மக்கள் அதிகம் விரும்பும் இடங்களை தேர்ந்தெடுத்து, வீட்டுவசதி வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுகிறது. புதிதாக மக்கள் அதிகம் குடியேறும் இடங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப் படுகின்றன. இந்த வகையில் செங்கல்பட்டு, பரனுார் ஏரியின் அருகில், வீட்டுவசதி வாரியத்திற்கு, 53 கிரவுண்ட் நிலம் உள்ளது. இங்கு, அடித்தளத்துடன் 15 மாடிகள் கொண்டதாக, அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதில், 698 முதல், 1,127 சதுர அடி வரை, வெவ்வேறு அளவுகளில் 116 வீடுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்த வீடுகளுக்கு, 247 முதல், 398 சதுர அடி வரை நிலத்தின் பிரிபடாத பங்கான, யு.டி.எஸ்., ஒதுக்கீடு இருக்கும். குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்காக மட்டுமே, தற்போது இங்கு வீடுகள் விற்பனைக்கு உள்ளன. 39.58 லட்சம் ரூபாய் முதல், 66 லட்சம் ரூபாய் வரையிலான விலைகளில், வீடுகள் உள்ளன. இணையதள குலுக்கல் மூலமாக வீடுகள் ஒதுக்கீடு பெற விரும்புவோர், செப்., 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம், விண்ணப்பிக்க தகுதி மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விபரங்களை, https://tnhb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பெறலாம் என, வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.