ஊரப்பாக்கத்தில் பூங்கா இடத்தை மீட்க முடியாமல் அதிகாரிகள்...திணறல் ஆளுங்கட்சியினர் தலையீட்டால் பின்வாங்குவதாக குற்றச்சாட்டு
ஊரப்பாக்கம், :ஊரப்பாக்கத்தில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள,'ஓ.எஸ்.ஆர்., இடத்தை மீட்க முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர். ஆளும் கட்சியினர் தலையீடே இதற்கு காரணம் என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. லட்சத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வசிக்கின்றனர்.இங்குள்ள, 11வது வார்டுக்கு உட்பட்ட பிரியா நகரில் வீட்டு மனைப் பிரிவுகள் உருவாக்கப்பட்ட போது, பூங்கா அமைப்பதற்காக 34.5 சென்ட் இடம், ஓ.எஸ்.ஆர்., எனும், திறந்தவெளி ஒதுக்கீடு இடமாக ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.அதன் பின், இந்த இடத்தின் முகப்பு பகுதியில் உள்ள, 2,400 சதுர அடி பரப்பு இடம், போலி ஆவணங்கள் வாயிலாக, தனி நபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் வீடும் கட்டப்பட்டது.இந்த ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத்தரும்படி, பகுதிவாசிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பாளருக்கு கடந்த 2024 டிச., 19ம் தேதி, அந்த இடத்தை காலி செய்யும்படி, படிவம் 7 வழங்கப்பட்டது.பின், கடந்த ஜனவரி 3ம் தேதி, ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடிப்பதாக, படிவம் 6ம் வழங்கப்பட்டது.ஆனாலும், ஆக்கிரமிப்பாளர் இதை கண்டுகொள்ளாமல், அந்த இடத்தை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளார்.இதையடுத்து, பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட அந்த இடத்தை மீட்டு நடைபாதை, சிறுவர் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா அமைக்க வேண்டுமென, ஊரப்பாக்கம் பகுதிவாசிகள் புகார் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:ஊரப்பாக்கம், வார்டு 11க்கு உட்பட்ட பிரியா நகர் - 2ல், கடந்த 1989ம் ஆண்டு புதிய வீட்டு மனைப்பிரிவு உருவாக்கப்பட்டது.இதில், சிறுவர் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா அமைக்க, சர்வே எண் 76/40 சி1, சி2, சி3 கீழ் உள்ள 14,958 சதுர அடி இடம், ஓ.எஸ்.ஆர்., எனும் திறந்தவெளி ஒதுக்கீடு இடமாக, ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்டது.இப்பகுதி வளர்ச்சியடைய துவங்கும் போது, அந்த ஓ.எஸ்.ஆர்., இடத்தை போலி ஆவணங்கள் வாயிலாக, தனி நபர் ஒருவர் தனதாக்கி, அதிகாரிகளுக்கு, 'சம்திங்' கொடுத்து, 'பட்டா'வும் வாங்கி, வீடு கட்டினார்.பகுதிவாசிகளுக்கும், நலச்சங்கத்தினருக்கும் இந்த விபரம் தெரிய வர, இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, அந்த இடத்திற்கு வழங்கப்பட்ட 'பட்டா' மாவட்ட நிர்வாகத்தால், ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பாளர் அந்த இடத்தை காலி செய்ய மறுத்துவிட்டார்.இதனால், இடத்தை சட்டப்படி மீட்கவும், கட்டடங்களை அப்புறப்படுத்தவும் பகுதிவாசிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.அதன்படி, கடந்த பிப்., 25ம் தேதி, ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடு உள்ளிட்ட கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.பின், மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி, வண்டலுார் வட்டாட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் அந்த கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த, மூன்று முறை முயற்சி செய்தார்.ஆனால், ஆளும் கட்சியினரின் தலையீட்டால், வட்டாட்சியரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. அதுமட்டுமின்றி, கடந்த மாதம் அவர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டார்.நீதிமன்ற உத்தரவின்படி, இதுவரை ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள கட்டடங்கள் அகற்றப்படவில்லை. ஆளும் கட்சியினர் ஆதரவோடு, ஆக்கிரமிப்பாளர் அந்த இடத்தை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளார்.சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த நிலத்தை முழுமையாக மீட்டு, பகுதிவாசிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, நடைபாதையுடன் கூடிய சிறுவர் விளையாட்டு திடல் மற்றும் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி, வண்டலுார் வட்டாட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் அந்த கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த, மூன்று முறை முயற்சி செய்தார். ஆனால், ஆளும் கட்சியினரின் தலையீட்டால், வட்டாட்சியரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. அதுமட்டுமின்றி, கடந்த மாதம் அவர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டார்