உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்கம்பி அறுந்து விழுந்து ஆட்டோ ஓட்டுநர் பலி

மின்கம்பி அறுந்து விழுந்து ஆட்டோ ஓட்டுநர் பலி

ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கத்தில், ஆட்டோ ஓட்டுநர் மீது, உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். வண்டலுார் அடுத்த ஊரப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மேகநாதன் பிரபு, 46; ஆட்டோ ஓட்டுநர். தினமும் காலை 9:00 மணிக்கு ஆட்டோ ஓட்ட சென்று, இரவு 10:00 மணிக்கு வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார். நேற்று முன்தினம் மாலை, ஆட்டோவில் பழுது ஏற்பட்டதால், அதை சரி செய்ய, வண்டலுார் -- ஓட்டேரி மேம்பாலத்தின் கீழ் உள்ள பழுது நீக்கும் கடைக்குச் சென்றுள்ளார். பின், 6:30 மணியளவில், தன் ஆடையில் படிந்திருந்த 'ஆயில்' கரையை நீக்க, அருகில் இருந்த பொது கிணற்றில் தண்ணீர் எடுத்து, மூடு கால்வாய் நடைமேடையில் வைத்து, ஆடையில் இருந்த கரையை நீக்கி உள்ளார். அப்போது, நடைமேடையின் அருகே, இரு மின்கம்பங்களுக்கு இடையே சென்ற மின் கம்பி, திடீரென அறுந்து, மேகநாதன் பிரபு மீது விழுந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே, அவர் உடல் கருகி பலியானார். தகவல் அறிந்த கிளாம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, மேகநாதன் பிரபு உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ