கோவில் வளாகத்தை ஆக்கிரமிக்கும் பேனர்கள்
கூடுவாஞ்சேரி: நந்திவரம், திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தைச் சுற்றி வைக்கப்படும் விளம்பர பேனர்களை அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள சின்ன குளக்கரை பகுதியில், அரசியல் கட்சியினர் சார்பில் அதிக அளவில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால், அவ்வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் இந்த விளம்பர பேனர்களை, நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். மேலும், கோவில் வளாகத்தைச் சுற்றிலும் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.