பைக் திருடும் கும்பல் செங்கல்பட்டில் கைது
செங்கல்பட்டு,செங்கல்பட்டு பஜார் வீதியில், ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அங்கு போதையில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல், ரகளையில் ஈடுப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர், செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த கும்பலை மடக்கிப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அந்த கும்பல், சென்னை கல்லறை பகுதியைச் சேர்ந்த வாண்டு என்ற ரவிபாரதி, 21, பாண்டி என்ற சீவலப்பேரி பாண்டி,35, ராணிப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற துப்பாக்கி,23, கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சக்திவேல்,24, மற்றும் மூன்று சிறார்கள் என தெரிந்தது.இவர்கள் அனைவரும் செங்கல்பட்டு ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் மொபைல்போன்களை திருடி வந்ததும் தெரிந்தது.கடந்த 11ம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், நெடுஞ்செழியன் என்பவரின் 'யமஹா ஸ்கூட்டர்' ஒன்றை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, இவர்களை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்கள் திருடிச் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.