காற்றில் விளம்பர பேனர் சரிந்து பைக்கில் சென்றவர் காயம்
திருப்போரூர்:படூர் ஆறுவழிச்சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் சரிந்து பைக்கில் சென்றவர் மீது விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. கேளம்பாக்கம் அருகே படூர் ஓ.எம்.ஆர்., சாலை, ஆறுவழிச்சாலை சந்திப்பு அருகே அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், தனி நபர்கள் அதிக அளவில் பேனர்கள் வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவில் காற்றுடன் மழை பெய்தது.கேளம்பாக்கத்தில் இருந்து படூர் ஆறுவழிச்சாலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த குப்தா, 42 என்பவர் டி.வி.எஸ்., ஜூபிட்டர் ஸ்கூட்டி பைக்கில் சென்றவர் மீது படூர் ஆறுவழிச்சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் சாய்ந்து விழுந்தது. இதில் அவருக்கு தலை, கை, காலில் லேசான காயம் ஏற்பட்டது.அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாய்ந்து கிடந்த பேனரை மற்ற வாகனங்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அப்புறப்படுத்தினர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெடுஞ்சாலையோரம் உள்ள பேனர்களை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.