துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயம்; 2 பேர் கைது
சித்தாமூர்,:நாட்டு துப்பாக்கியால் நாயை சுட்டபோது, குறி தவறி சிறுவன் மீது குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.சித்தாமூர் அடுத்த விளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 55. இவரது வீட்டின் அருகே நீண்ட நாட்களாக உடலில் காயம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசிய நிலையில் நாய் ஒன்று சுற்றி திரிந்தது. நாயை சுட்டு பிடிக்க, சிறுக்கரணை கிராமம் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த சரத்குமார், 30; என்பவரை நேற்று முன்தினம் காலை அழைத்து வந்தார்.குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த நாயை, பறவைகள் சுடும் நாட்டு துப்பாக்கியால் சுட்ட போது, நாய் தப்பியது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற கொக்கரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவன் குறளரசன், 11 என்பவர் தலையில் குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த சிறுவனை, அருகே இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.இதுகுறித்து சிறுவனின் தந்தை முருகன் சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து , சரத்குமார் மற்றும் அவருடன் வந்த வெங்கடேசன் ஆகிய இருவரை நேற்று கைது செய்து, மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.