| ADDED : நவ 19, 2025 05:04 AM
சென்னை: கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த மருத்துவக்கல்லுாரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கார் ஓட்டுநரை, போலீசார் நேற்று கைது செய்தனர். பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த, 21 வயது இளம்பெண் ஆயுர்வேத மருத்துவக்கல்லுாரியில், 5ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, பின்னே நின்ற நபர், அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் மகளிர் போலீசார், கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஜயகுமார், 48, என்பவர், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். விஜயகுமார், தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில், அரசு கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரியவந்தது.