சி.பி.எஸ்.இ., பள்ளி கூடைப்பந்து பி.எஸ்.பி.பி., அணி த்ரில் வெற்றி
சென்னை சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், பி.எஸ்.பி.பி., அணி த்ரில் வெற்றி பெற்றது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, ஆர்.எம்.கே., பள்ளி சார்பில், கவரைப்பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் நேற்று காலை துவங்கியது. இதில், மாநிலம் முழுதும் உள்ள 200 பள்ளிகளில் இருந்து, 5,000 மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர். இதில், 14, 17 மற்றும் 19 வயது பிரிவினருக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. முதல் நாள் போட்டியை, ஆர்.எம்.கே., கல்வி குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்திரனம் துவக்கி வைத்தார். துணை தலைவர் கிஷோர், இயக்குநர் ஜோதி நாயுடு ஆகியோர் உடனிருந்தனர். மாணவர்கள், 19 வயது பிரிவில், மணப்பாக்கம், சைதன்யா டெக்னோ பள்ளி, 17 - 7 என்ற கோல் கணக்கில் நாராயணா டெக்னோ பள்ளியை வீழ்த்தியது. முகப்பேர் டி.ஏ.வி., பள்ளி, 28 - 16 என்ற கோல்கணக்கில் சியோன் பள்ளியையும், திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் பள்ளி 42 - 40 என்ற கணக்கில் விகாஸ் மந்திரா பள்ளியையும் தோற்கடித்தன. அதேபோல, 17 வயது பிரிவில் ஜோதி நிகேதன் பள்ளி, 44 - 11 என்ற கோல் கணக்கில் திருச்சி அமிர்தா வித்யாலயம் அணியையும், திருச்சி ஸ்ரீ நிகேதன் பாடசாலை, 37 - 22 என்ற கோல் கணக்கில் ஆலிவ் ட்ரி குளோபல் பள்ளியையும் தோற்கடித்தன. மாணவியருக்கான 14 வயதில், கே.கே.நகர் பி.எஸ்.பி.பி., பள்ளி, 17 - 16 என்ற கோல் கணக்கில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.