கூரை பெயர்ந்து விழுந்து மாணவர்கள் காயம் கருப்பு பட்டியலில் ஒப்பந்ததாரர் சேர்ப்பு
செங்கல்பட்டு:புதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, இப்பணியை செய்த தனியார் ஒப்பந்ததாரர், 'பிளாக் லிஸ்ட்' எனும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளார்.மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், புதுப்பட்டு ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு, 2024 - 25ம் நிதியாண்டில் இரண்டு புதிய கட்டடங்கள், குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 33 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டன.பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஏப்ரலில் பயன்பாட்டுக்கு வந்தது. நேற்று முன்தினம், இந்த கட்டடத்தின் கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து, இரு மாணவர்கள், மூன்று மாணவியர் என, ஐந்து பேர் காயமடைந்தனர்.இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா உத்தரவுப்படி, நேற்று முன்தினம் மாலை, கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா பள்ளியில் ஆய்வு செய்தார். இதையடுத்து, மேற்கண்ட பணியை செய்த, மேல்மா கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கிருஷ்ணன் என்பவர், 'பிளாக் லிஸ்ட்' எனும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு, இனிவரும் காலங்களில் எவ்வித ஒப்பந்த பணியும் மேற்கொள்ளாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இப்பணியை கண்காணிக்க தவறிய உதவி பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.அத்துடன், பள்ளியில் சம்பந்தப்பட்ட கட்டடத்தில் உள்ள அனைத்து சிமென்ட் பூச்சையும் அகற்றி, மீண்டும் முறையாக பூச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காயமடைந்த ஐவரில், மாணவர்கள் இருவர், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் இருந்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இங்கு சிகிச்சை பெற்றதில், ஒரு மாணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.