குடிசை வீடு இரவில் எரிந்து நாசம்
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காந்தி நகரில், குடிசை வீடு தீப்பற்றி எரிந்து நாசமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். மறைமலை நகர் நகராட்சி, 8வது வார்டில் உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 36; கூலித்தொழிலாளி. இவர், மனைவி மற்றும் குழந்தையுடன் வெளியில் சென்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், கூரை வீடு திடீரென தீப்பிடித்துள்ளது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனே மறைமலை நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து, வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள், கல்விச்சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்டவை முழுதும் எரிந்து நாசமாயின. தீ விபத்திற்கான காரணம் குறித்து, மறைமலை நகர் போலீசார் விசாரித்தனர். இதில், வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்த நிலையில், அருகிலுள்ள பொருட்களில் தீ பரவி குடிசை வீடு தீக்கிரையானது தெரிந்தது. இதுகுறித்து, மறைமலை நகர் போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.