உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சேதமடைந்துள்ள மின்கம்பிகள் :ஜே.சி.கே., நகர் பூங்காவில் பீதி

 சேதமடைந்துள்ள மின்கம்பிகள் :ஜே.சி.கே., நகர் பூங்காவில் பீதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜே.சி.கே., நகர் பூங்காவில், சேதமடைந்துள்ள மின் கம்பிகளை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே., நகர் பகுதியில், தனியார் வீட்டுமனைகள் ஏற்படுத்திய போது, பூங்காவிற்கு இடம் ஒதுக்கி, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பகுதியில், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இங்குள்ளவர்கள், நடைபயிற்சி செய்யவும், குழந்தைகள் விளையாடவும் முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், மேற்கண்ட பகுதியில் நடைபயிற்சி மற்றும் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அமைத்து தர வேண்டும் என, பொதுநல சங்கங்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலர் ஆகியோர், நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் பின், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 2021 - 22ம் ஆண்டு, ஜே.சி.கே., நகர் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், ஏராளமான குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பூங்கா வளாகத்தில் நடைபாதை பகுதிகளில் ஆங்காங்கே மின் கம்பிகள் சேதமடைந்து, மின் ஒயர்கள் வெளியில் தெரிவதால், மின் விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதை சீரமைக்க, நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும், நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடப்பதற்குள், சேதமடைந்துள்ள மின்கம்பிகளை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை