சேதமான மின் மாற்றி கம்பம் கொண்டமங்கலத்தில் ஆபத்து
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில், 350க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு, சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதற்காக, கொண்டமங்கலம் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன் மின் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியில் உள்ள மின் கம்பங்கள், மிகவும் சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளன.இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:இந்த மின்மாற்றியில் உள்ள கம்பங்களில், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து காணப்படுகிறது. மின் கம்பிகளின் துணையின் காரணமாகவே, இந்த மின்மாற்றி கீழே விழாமல் உள்ளது.மின் வாரிய அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.