ஆப்பூர் சாலையில் இருள் மின் விளக்குகள் அவசியம்
மறைமலை நகர், ஆப்பூர் சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் -- ஆப்பூர் சாலை 7 கி.மீ., உடையது. சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது. மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், திருக்கச்சூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல, இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஆப்பூர், சேந்தமங்கலம் கிராமத்தினர், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். இந்த சாலையில் ஆப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தாலிமங்களம் பகுதியில் இருந்து ஆப்பூர் வரை, 1 கி.மீ., வரை மின் விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இருபுறமும் வனப்பகுதி என்பதால் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, இந்த சாலையில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.