மூடு கால்வாயில் மரண ஓட்டைகள் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் பீதி
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் உள்ளே அமைக்கப்பட்டுள்ள மூடுகால்வாய், பல இடங்களில் மரண ஓட்டையுடன் உள்ளது. விபத்து நிகழும் முன், இவற்றை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் ஒரு ஏக்கர் பரப்பில் வாகன நிறுத்துமிடம், கழிப்பறை வசதியுடன் உள்ளது.செங்கல்பட்டு மற்றும் சென்னையின் முக்கிய இடங்களுக்கு, நேரடியாக இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் இங்கிருந்து, பேருந்துகள் வாயிலாக பயணிக்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர் ஓரம், மூடுகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, நடைமேடையாகவும் இந்த மூடுகால்வாய் பயன்படுத்தப்படுகிறது.இந்த மூடுகால்வாய் மேலே உள்ள சிமென்ட் 'சிலாப்', பல இடங்களில் பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளன. இதனால், பல இடங்களில் 10 அடி ஆழ ஓட்டைகள் தற்போது உள்ளன.பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர் கவனக்குறைவாக இந்த பள்ளத்தில் விழுந்தால், படுகாயம் அடையவும், உயிர்பலி ஏற்படவும் வாய்ப்புள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, கால்வாய் மீது மீண்டும் சிமென்ட் சிலாப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.