கந்தசுவாமி கோவில் இடத்திற்கு கூடுதல் தொகையாக...ரூ.145 கோடி: வழங்க கோரி அரசுக்கு அறநிலையத் துறை கருத்துரு
திருப்போரூர்:திருப்போரூரில், ஆறுவழிச் சாலை பணிக்காக கந்தசுவாமி கோவில் நிலங்களை கையகப்படுத்தியதற்கு, 32 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதலாக 145 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை கேட்டு தமிழக அரசுக்கு, ஹிந்து சமய அறநிலைய துறை கருத்துரு அனுப்பி உள்ளது.ஓ.எம்.ஆர்., சாலை எனும் பழைய மாமல்லபுரம் சாலை, சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து, மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி வரை, 42 கி.மீ., துாரம் உள்ளது.கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது, இச்சாலை ஆறுவழிச் சாலையாக மாற்றப்பட்டு, சிறுசேரி சிப்காட் பூங்கா வரை ராஜிவ்காந்தி சாலையாக பெயர் சூட்டப்பட்டது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை, நான்குவழிச் சாலையாக அமைக்கப்பட்டது.கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, சட்டசபையில் 110 விதியின் கீழ், 'சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக, பூஞ்சேரி வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும்' என அறிவித்தார். அதன்படி, படூர் -- தையூர் வரை ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய காலவாக்கம் - ஆலத்துார் ஊராட்சியில் அடங்கிய வெங்கலேரி இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது, இந்த இரண்டு புறவழிச் சாலைகளும், 465 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், 95 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன.இதில், காலவாக்கம் -- வெங்கலேரி இடையிலான 7.45 கி.மீ., துார சாலையில் கண்ணகப்பட்டு, திருப்போரூர், தண்டலம் ஆகிய பகுதிகள் உள்ளன.மேற்கண்ட ஆறுவழிச் சாலைக்காக, திருப்போரூர் கந்தசுவாமி கோவில் சார்ந்த நிலம் மற்றும் விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது.கந்தசுவாமி கோவிலுக்குச் சொந்தமாக திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 600 ஏக்கர் நிலங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் கடைகள் உள்ளன. கந்தசுவாமி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக, 3 கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, பக்தர்கள் ஓய்வுக்கூடம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.மேலும், 6 கோடி ரூபாய் மதிப்பில், 500 பேர் அமரும் வகையில், பிரமாண்ட திருமண மண்டபம் கட்டுவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு உள்ளன.திருப்போரூரில் மட்டும், ஆறுவழிச் சாலை பணிக்கு, கந்தசுவாமி கோவிலின் பெரும்பாலான நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில், கந்தசுவாமி கோவிலுக்குச் சொந்தமான 1.12 லட்சம் சதுர அடி நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.இதற்கான இழுப்பீடு தொகையாக கோவில் நிர்வாகத்திற்கு, 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், மேலும், 145 கோடி ரூபாய் கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு, ஹிந்து சமய அறநிலையத் துறையானது, அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளது.
கூடுதல் வருவாய்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு பல்வேறு மாவட்டம், மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.பக்தர்களின் வருகை அதிகரிப்பு, உண்டியல் வருமானம், வாகன நுழைவு கட்டணம், பிரசாத கடை ஆண்டு ஏலம், காணிக்கை முடி ஏலம், கடை, திருமண மண்டபம் வாடகை உள்ளிட்டவற்றால், வருமானம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, ஓராண்டுக்கு 6 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.மேலும், ஆறுவழிச் சாலைக்கு கோவில் நிலங்களை கையகப்படுத்தியதால், தற்போது 32 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இந்நிலையில், மேலும் 145 கோடி ரூபாய் கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு, ஹிந்து சமய அறநிலையத் துறையானது, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதால், மேலும் வருவாய் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், கோவில் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் துவங்கப்படலாம் எனவும் கருதப்படுகிறது.