மூடுகால்வாயில் மழைநீர் செல்ல நிரந்தர வழி இல்லாததால் அதிருப்தி
சேலையூர்:சேலையூர் அடுத்த வேங்கைவாசலில் தேங்கும் மழைநீர், சாலையோர கால்வாய் வழியாக சென்று, அங்குள்ள 'டாஸ்மாக்' கடை அருகே சிறுபாலத்தில் கடந்து, சித்தேரிக்கு செல்லும்.போதிய அகலத்தில் கால்வாய் இல்லாததால், ஒவ்வொரு மழையின்போதும், அச்சாலையில் 4 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்குகிறது. இதனால், போக்குவரத்து தடைபட்டு, பகுதிவாசிகள் பாதிக்கப்பட்டனர்.பல ஆண்டுகளாக நீடித்து வந்த இப்பிரச்னைக்கு தீர்வாக, சிறுபாலம் வழியாக வரும் தண்ணீர், தடையின்றி சித்தேரிக்கு செல்லும் வகையில், 6 கோடி ரூபாய் செலவில், 300 மீட்டர் துாரத்திற்கு மூடுகால்வாய் கட்டப்பட்டது.இதில், 8 அடி உயரம், 14 அடி அகலத்தில் கட்டப்பட்ட இக்கால்வாய், டாஸ்மாக் கடை அருகே, சாலையை கடக்கும் சிறுபாலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுபாலம் வழியாக வரும் தண்ணீர், மூடுகால்வாய்க்குள் செல்ல பாதை ஏற்படுத்தவில்லை.இதனால், கடந்த வாரம் பெய்த மழையில், மூடுகால்வாய்க்குள் தண்ணீர் செல்ல வழியின்றி, வேங்கைவாசல் பிரதான சாலையில் தேங்கியது.கால்வாய் அமைத்தும் வெள்ளம் தேங்கியதால், அப்பகுதிவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்களோ, மக்களின் கோரிக்கையை பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பெயருக்காக இதையடுத்து, அந்த இடத்தில், இயந்திரம் வாயிலாக 2 அடி அகலத்திற்கு துளையிட்டு, பாதை ஏற்படுத்தினர். அதன்பின், சாலையில் தேங்கிய வெள்ளம் வடிந்தது.ஆனால், நிரந்தர வழி ஏற்படுத்தாததால், அடுத்தடுத்த மழைக்கு, இச்சாலையில் வெள்ளம் தேங்கும் அபாயம் உள்ளது என, பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.புதிதாக கட்டப்பட்டுள்ள மூடுகால்வாய்க்குள் மழைநீர் செல்லும் வகையில், நிரந்தர பாதை ஏற்படுத்தி, வரும் மழையில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.