நந்திவரத்தில் நாய்கள் தொல்லை பேருந்து நிலைய பயணியர் அவதி
கூடுவாஞ்சேரி:நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜி.எஸ்.டி., சாலையில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் வண்டலுார் , தாம்பரம், கோயம்பேடு,வடபழனி, சென்னை, செங்கல்பட்டு , திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 88 பேருந்துகள் சென்று வருகின்றன.நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்கள் மட்டும் இல்லாமல், காயரம்பேடு, பெருமாட்டு நல்லூர் , மாடம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி,பல்வேறு இடங்களுக்கு சென்று திரும்புகின்றனர். இந்நிலையில் சில நாட்களாக இந்த பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.பேருந்து நிலைய வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என, பயணியரிடம் கோரிக்கை எழுந்துள்ளது.