செங்கையில் 17 வார்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், 17 வார்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.இதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குண்டூர், அனுமந்தபுத்தேரி பகுதிகளில், நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது.இத்திட்டம், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தை மற்ற பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம், நகரவாசிகள் வலியுறுத்தினர்.இதை தொடர்ந்து, 17 வார்டுகளில், நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.இத்திட்டத்தை செயல்படுத்த, ஆழ்துளை கிணறு மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட பணிகளை செயல்படுத்த, நகராட்சி பொது நிதி மற்றும் குடிநீர் நிதி என, 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நகரமன்றம் ஒப்புதல் வழங்கியது. இப்பணிகளை செயல்படுத்த, டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.