மிகவும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் 15 ஆண்டாக கண்டுகொள்ளாத மின்வாரியம்
சித்தாமூர்:மேல்வசலை கிராமத்தில், விவசாய நிலத்தில் மிகவும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சித்தாமூர் அடுத்த மேல்வசலை கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதி வயல்வெளியில் உள்ள மின் மோட்டார்களுக்கு, காட்டுதேவாத்துார் பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்து, மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வயல்வெளியில் பல இடங்களில், மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால், டிராக்டர்கள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியாமல், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மேலும், அந்த வழியாக நடந்து செல்லவும், விவசாயிகள் அச்சப்படுகின்றனர். வயல்வெளிப் பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள், தாழ்ந்து செல்லும் மின்கம்பிகளில் உரசி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. விவசாய பணி மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு முறையும் மின்சார இணைப்பை துண்டித்துவிட்டு பணி செய்ய வேண்டியுள்ளதால், விவசாயிகளுக்கு மேலும் சிரமம் ஏற்படுகிறது. லேசான காற்று வீசினாலும், மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க கோரி, கடந்த 15 ஆண்டுகளாக மின்வாரியத் துறை அதிகாரிகளிடம், தொடர்ந்து விவசாயிகள் மனுக்கள் அளித்து வருகின்றனர். ஆனால், மின்கம்பிகள் உயர்த்தி அமைக்கப்படவில்லை. எனவே, மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாய நிலத்தில் விபத்து ஏற்படுத்தும் நிலையிலுள்ள இந்த மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.