நெல்லிக்குப்பத்தில் மின்சார அலுவலகம் திறப்பு
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய நெல்லிக்குப்பம் ஊராட்சியில் நெல்லிக்குப்பம், அகரம், அம்மாப்பேட்டை ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன. அம்மாப்பேட்டை கிராமத்தில், 110 கிலோ வாட் திறன் கொண்ட மின் வழங்கல் நிலையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த மின் நிலையத்தில் இருந்து கொண்டங்கி, கீழூர் என, 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, மின் வினியோகம் செய்யப் படுகிறது. இந்நிலையில், இந்த நெல்லிக்குப்பம் மின் நிலையத்திற்கு, மின் கட்டணம் வசூல் மையம் உருவாக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக, நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார மக்கள் புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கவும், மின் கட்டணம் செலுத்தவும், 10 முதல் 15 கி.மீ., துாரத்தில் உள்ள திருப்போரூர் மின்வாரிய அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மக்களுக்கு நேர விரயமும், பண விரயமும், வீண் அலைச்சலும் ஏற்பட்டு அவதிப்பட்டனர். எனவே, நெல்லிக்குப்பம் மின் வழங்கல் நிலையத்தில் புதிய இளநிலை பொறியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்றும், மின் கட்டணம் செலுத்தும் மையம் ஏற்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கை தொடர்பாக, நம் நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நெல்லிக்குப்பத்தில், உதவி மின்பொறியாளர் அலுவலகம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக, சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து உதவி மின்பொறியாளர் அலுவலகம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா, நேற்று நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில், மாவட்ட கலெக்டர் சினேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.