திருப்போரூர் ஆறுவழிச்சாலை சந்திப்பில் வழிகாட்டி பலகை அமைக்க எதிர்பார்ப்பு
திருப்போரூர், திருப்போரூர் வட்டத்தில், படூர் - தையூர் வரை ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் பேரூராட்சி காலவாக்கம்- - ஆலத்துார் ஊராட்சி வெங்கலேரி இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.தற்போது, இரண்டு புறவழிச் சாலைகளும், 465 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.இதில், திருப்போரூர் - ஆலத்துார் இடையில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலையில், கனரக வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இதில், திருப்போரூரில் நெம்மேலி சாலை - ஆறுவழிச்சாலை நான்கு முனை சந்திப்பில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், திருப்போரூர் கந்தசுவாமி கோவில், சார் - பதிவாளர் அலுவலகம், ஓ.எம்.ஆர்., சாலை, செங்கல்பட்டு சாலை, இ.சி.ஆர்., சார்ந்த பகுதிகளுக்கு திரும்பி செல்கின்றனர்.இந்நிலையில், வழி தெரியாதவர்கள் இச்சாலை சந்திப்பில் வந்த பின் குழப்பமடைகின்றனர். திடீரென சாலையில் நின்று, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, தாங்கள் செல்லும் பகுதிக்கான வழியை கேட்க வேண்டியுள்ளது.வழிகாட்டி பலகை அங்கு அமைக்காததால், வாகன ஓட்டிகள் குழப்பம் அடைவதுடன் அங்கு விபத்துகள் ஏற்படும் சூழலும் உள்ளது.எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, மேற்கண்ட நான்கு முனை சந்திப்பு பகுதியில், வழிகாட்டி பெயர்ப்பலகை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.