கூவத்துார், : கூவத்துாரில் அங்காளம்மன் கோவில் அருகே, இந்தியன் வங்கி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.கடலுார், வடபட்டினம், தென்பட்டினம், வேப்பஞ்சேரி, நெடுமரம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, இந்த வங்கியில் பணப்பரிவர்த்தனை செய்கின்றனர்.ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், முதியவர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்றோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை என, அனைத்து விதமான அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகள், இந்த வங்கி வாயிலாகவே அப்பகுதிவாசிகள் பெற்று வருகின்றனர்.தினசரி, நுாற்றுக்கணக்கான மக்கள் இந்த வங்கிக்கு வந்து செல்கின்றனர். மேலும், கூவத்துார் பகுதியில், 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.பெரும்பாலான கடை வியாபாரிகள், இந்த வங்கியில் பணம் பரிவர்த்தனை செய்கின்றனர். 10,000 ரூபாய்க்கு கீழ் பணம் எடுப்பவர்களுக்கு, ஆதார் அட்டை வாயிலாக, மூன்று பி.ஓ.எஸ்., இயந்திரங்கள் வழியாக பணம் வழங்கப்படுகிறது.மேலும், 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு, வங்கி கணக்காளர் வாயிலாக பணம் வழங்கப்படுகிறது.வார துவக்க நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், அதிகப்படியான பொதுமக்கள் வங்கிக்கு வந்து செல்வதால், வங்கி கணக்காளர் மற்றும் பி.ஓ.எஸ்., இயந்திரம் அருகே அதிக நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.பணம் எடுக்க, இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் வங்கியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது புதிதாக வேறு வங்கி துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.