உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேடந்தாங்கலில் மதி அங்காடி மகளிர் குழுவினர் எதிர்பார்ப்பு

வேடந்தாங்கலில் மதி அங்காடி மகளிர் குழுவினர் எதிர்பார்ப்பு

மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, உலக புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.பங்களாதேஷ், பர்மா, இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன. டிச., - பிப்., மாதத்தில் பறவைகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.40,000க்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து, இரு மடங்காக மீண்டும் தங்கள் தாய் நாட்டிற்கு புறப்பட்டுச் செல்கின்றன.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு கடந்தாண்டு பெரியவர்கள் 74,000 மற்றும் சிறியவர்கள் 18,000 என, மொத்தம் 95,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணியர் வந்துள்ளனர். ஆண்டுதோறும், 90,000 பேர் வரை வருகின்றனர்.இந்நிலையில், இங்கு மதி அங்காடி அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது. அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 59 ஊராட்சிகளில், 1,200க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 15,000க்கும் மேற்பட்ட பெண்கள், மகளிர் குழுவில் உள்ளனர்.ஒரு குழுவிற்கு, 12 முதல்- 20 பேர் உள்ளனர். இந்த மகளிர் சுய உதவி குழுவினர் தயாரிக்கும் பொருட்களுக்கு, 'மதி' என்ற, 'பிராண்ட் நேம்' உருவாக்கப்பட்டு உள்ளது.சத்துமாவு, ஊறுகாய், கைவினைப் பொருட்கள் என, தமிழகம் முழுதும் மகளிர் குழுக்கள் தயாரிக்கும், 60க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு, 'மதி' என்ற பெயர் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் சிறுதானிய உணவுப் பொருட்கள், சத்துமாவு, ஊறுகாய், கைவினைப் பொருட்கள், வத்தல், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பொருட்களை, மகளிர் குழுவினர் தயாரிக்கின்றனர். ஆனால், விற்பனை செய்ய தேவையான அங்காடி இல்லை.எனவே, மகளிர் குழுவினர் பயன்பெறும் வகையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில், மதி அங்காடி அமைக்க அனுமதிக்க வேண்டுமென, மகளிர் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ