மாம்பாக்கம் சந்திப்பில் நெரிசல் மேம்பாலம் அமைக்க எதிர்பார்ப்பு
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மாம்பாக்கத்தில், நான்கு முனை சந்திப்பு சாலை உள்ளது.சாலையின் கிழக்கில் ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., செல்லும் சாலை; மேற்கில் ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் செல்லும் சாலை; வடக்கில் மேடவாக்கம் செல்லும் சாலை; தெற்கில் காயார் செல்லும் சாலைகள் உள்ளன.நான்கு புறத்தில் இருந்தும் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்க, அந்த இடத்தில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர்.இதனால், கேளம்பாக்கம் மற்றும் காயார் சாலையிலிருந்து மேடவாக்கம் செல்லும் வாகனங்கள், சமத்துவபுரம் குடியிருப்பு அருகே திரும்பி, அதே இடத்திற்கு வந்து, மேடவாக்கம் சாலையில் செல்கின்றன. இப்படி, வாகனங்கள் சுற்றும் தொலைவு, 3 கி.மீ., ஆகிறது.அதேபோல், மேடவாக்கம் உள்ளிட்ட சாலையிலிருந்து காயார் சாலையில் செல்லும் வாகனங்கள், சோணலுார் சந்திப்பு பகுதியில் திரும்பி வந்து செல்வதால், 4 கி.மீ., கூடுதலாக சுற்ற வேண்டியுள்ளது.இதனால், 20 அடியில் கடக்க வேண்டிய சாலையை, 4 கி.மீ., சுற்றி வந்து கடப்பதால், நேர விரயம் ஏற்படுவதுடன், எரிபொருளும் வீணாகிறது.அதேநேரம் காலை, மாலை, இரவு நேரத்தில் நீண்ட துாரம் வாகனங்கள் நின்று, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இந்த சிரமத்தை தவிர்க்க நிரந்தர தீர்வாக, மாம்பாக்கம் சந்திப்பில் மேம்பாலம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.