சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு
சித்தாமூர்:சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வடிகால் வசதி இல்லாததால் மழைகாலத்தில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்படுவதால் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். சித்தாமூர் பஜார் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி வள மையம் , வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், அரசு மாணவியர் விடுதி, நுாலகம், தபால் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. வளாகத்தில் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேற வழியின்றி வட்டார கல்வி வள மையம் , வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், அரசு மாணவியர் விடுதி உள்ள பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்குகிறது. இதனால் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கடும் அவதிப்படுகின்றனர். ஆகையால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.