நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் மீண்டும் இயக்க எதிர்பார்ப்பு
சூணாம்பேடு, சூணாம்பேடு ஊராட்சியில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.சித்தாமூர் ஒன்றியத்தின் பெரிய ஊராட்சியாக, சூணாம்பேடு உள்ளது.சூணாம்பேடு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மணப்பாக்கம், புதுப்பட்டு, வில்லிப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் வெளியூர்களுக்கு செல்ல, சூணாம்பேடு பஜார் பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தை பயன் படுத்துகின்றனர்.இப்பகுதியில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களுக்கு மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிக்கு, தினமும் சென்று வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து சூணாம்பேடு வழியாக, புதுச் சேரிக்கு தடம் எண் '83எ' கொண்ட எட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.நாளடைவில் படிப்படியாக பேருந்துகள் இயக்குவது குறைக்கப்பட்டு, தற்போது நான்கு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.இதே போல, தடம் எண் '162' மற்றும் '83பி' பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.இதனால், காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பேருந்து வசதியின்றி சிரமப்படுகின்றனர்.தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் படியில் தொங்கிக் கொண்டு, அபாய நிலையில் பயணம் செய்கின்றனர்.மேலும் பேருந்தில் இடவசதி இல்லாமல், நெரிசலில் சிக்கி பெண்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சூணாம்பேடு வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை, மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.