உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்பாக்கம் பகுதியில் வளர்ச்சியடைந்த ஊராட்சிகள் பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

கல்பாக்கம் பகுதியில் வளர்ச்சியடைந்த ஊராட்சிகள் பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

புதுப்பட்டினம்:கல்பாக்கம் பகுதியில், நகர்ப் பகுதிகளாக வளர்ச்சியடைந்த புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகிய ஊராட்சிகளை, பேரூராட்சியாக தரம் உயர்த்த, அரசு நடவடிக்கை எடுக்க, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரியம் அருகில், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. அணுசக்தி துறை கல்பாக்கம் நகரியம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகிய ஊராட்சிகளுடன் ஒருங்கிணைந்ததாகவே உள்ளது. புதுப்பட்டினம் ஊராட்சியின் எட்டு வார்டுகள், சதுரங்கப்பட்டினம் ஊராட்சியின் இரண்டு வார்டுகள் கல்பாக்கம் நகரியத்தில் இடம்பெற்றுள்ளன.புதுப்பட்டினம் ஊராட்சியின் மக்கள்தொகை, கல்பாக்கம் பகுதியை தவிர்த்து, 10,000க்கும் அதிகம். சதுரங்கப்பட்டினம் ஊராட்சியின் மக்கள்தொகை, கல்பாக்கம் பகுதியை தவிர்த்து, 10,000க்கும் அதிகம். நகரிய பகுதியை, அணுசக்தி துறை நிர்வகித்து பராமரிப்பதால், அப்பகுதியை ஊராட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் நீண்டகாலமாக கருதுகின்றனர்.இரண்டு ஊராட்சிகளிலும், நகர்ப் பகுதிக்குரிய அதிக மக்கள் வசிக்கின்றனர். புதுப்பட்டினம் ஊராட்சிக்கு, அணுசக்தி துறையினர், ஆண்டிற்கு சில கோடி ரூபாய், தொழில்வரி செலுத்துகின்றனர். அணுசக்தி தொழில்வளாக குறிப்பிட்ட பகுதி, சதுரங்கப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்டது என்பதால், இந்த ஊராட்சியும் தொழில்வரி கேட்டு, சில ஆண்டுகளாக வலியுறுத்துகிறது.இச்சூழலில், ஊராட்சிகளில், நகரிய பகுதியை விலக்கி, அவற்றுடன் அருகாமை ஊராட்சிகளை இணைத்து, புதிய பேரூராட்சிகள் உருவாக்குவதும், அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில், ஊராட்சிகளை இணைத்து, பேரூராட்சியாக தரம் உயர்த்துவது, அரசின் முடிவாகவும் உள்ளது. இவ்விரண்டு ஊராட்சிகளையும், தனித்தனி பேரூராட்சியாக தரம் உயர்த்த, ஓராண்டிற்கு முன்பே, பேரூராட்சிகள் இயக்குனரகம், ஊராட்சி விபரங்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

புதுப்பட்டினம் ஊராட்சி, நகர பகுதியாக வளர்ச்சியடைந்து வருகிறது. கல்பாக்கத்தின் முக்கிய வணிக இடமாகவும் இப்பகுதி உள்ளது. கல்பாக்கம் பகுதியினர், அனைத்து தேவைகளுக்கும், இங்குதான் வருகின்றனர். அணுசக்தி துறையினர் புதுப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில், இடம் வாங்கி வீடு கட்டி வசிக்கின்றனர். அதிக மக்கள்தொகை கொண்ட புதுப்பட்டினத்தை, பேரூராட்சியாக, தரம் உயர்த்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--எம்.காதர் உசேன், தலைவர்வணிகர் சங்கம், புதுப்பட்டினம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ