திருக்கழுக்குன்றம் சந்திப்புகளில் சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், சதுரங்கப்பட்டினம் - செங்கல்பட்டு சாலை, திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் சாலை, திருக்கழுக்குன்றம் - கருங்குழி சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளன.இங்குள்ள தாலுகா, வட்டார வளர்ச்சி, சார் - பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு, இப்பகுதியினர், வெளியூர் பகுதியினர் இச்சாலைகள் வழியே வாகனங்களில் செல்கின்றனர்.அரசு பேருந்துகள் இயங்குகின்றன. பிரதான சாலைகள் பகுதி, வர்த்தக இடமாகவும் உள்ளதால், கூட்ட நெரிசலுடனும் உள்ளது.பேருந்து நிலைய பகுதியில், மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், செங்கல்பட்டு சாலை சந்திப்பு, பக்தவச்சலேஸ்வரர் கோவில் பகுதியில், சன்னிதி தெரு சந்திப்பு, மார்க்கெட் பகுதியில், சதுரங்கப்பட்டினம், செங்கல்பட்டு, கருங்குழி ஆகிய சாலைகள் சந்திப்பு ஆகிய இடங்களில், வாகனங்கள் தாறுமாறாக திரும்புகின்றன.வாகன ஓட்டுனர்கள், சாலை விதிகளை புறக்கணித்து, ஒரு சாலையிலிருந்து மற்றொரு சாலையில், வேகமாக வாகனங்களை திருப்புகின்றனர். இதனால், பிற வாகனங்கள் செல்ல முடியவில்லை. ஒரே நேரத்தில், வெவ்வேறு சாலைகளிலிருந்து, வேறு சாலைக்கு வாகனங்கள் திரும்புவதால், கடும் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து முடங்குகிறது.சதுரங்கப்பட்டினம் சாலை, சன்னிதி தெரு வழியே, அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம், பிற தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் செல்லும் வாகனங்கள், நெரிசல் காரணமாக அவசர சிகிச்சைக்கு செல்ல முடியவில்லை.அதனால், திருக்கழுக்குன்றத்தில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில், சிக்னல் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.