உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏரிகளில் விதி மீறி மண் எடுக்கப்படுவதாக நலன்காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

ஏரிகளில் விதி மீறி மண் எடுக்கப்படுவதாக நலன்காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சப்- - கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:செங்கல்பட்டு, செய்யூர் ஆகிய தாலுகா பகுதியில் உள்ள ஏரிகளில், கிழக்கு கடற்கரை சாலை பணிக்காக மண் எடுக்க, கனிமவளத் துறை அனுமதி வழங்கி உள்ளது.இந்த ஏரிகளில், விதிகளை மீறி 10 அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்படுகிறது. இங்கு மண் எடுப்போர், ஒரு லாரி மண் 5,000 ரூபாய்க்கு, தனியாருக்கு விற்பனை செய்கின்றனர்.கிழக்கு கடற்கரை சாலைக்கு மண் எடுத்துச்செல்லும் லாரிகளுக்கு, காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை தடை விதிக்க வேண்டும்.கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் பாலாற்றில், மணல் திருட்டு நடக்கிறது. அதைத் தடுக்க, போலீசாரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எல்.எண்டத்துாரில் துணை மின் நிலையம் அமைக்க, 5 ஏக்கர் நிலத்தை வருவாய்த் துறை வழங்கியது. இந்த நிலத்திற்கு, 2 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என, மின் வாரியத்திற்கு அறிவுறுத்தியது.ஆனால், இரண்டு ஆண்டுகளாக துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெறவில்லை. அதனால், விவசாய கிணறுகளில் மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகின்றன.மதுராந்தகம், செய்யூர் தாலுகா பகுதிகளுக்கு, அறுவடை இயந்திரங்கள் கூடுதலாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர்கள் வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுராந்தகம் ஏரியில் இருந்து, 23 கி.மீ., உயர்மட்ட கால்வாய் அமைத்தனர். இத்திட்டத்திற்காக, நிலம் வழங்கியவர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை.செங்கல்பட்டு - மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டு - கல்பாக்கம் ஆகிய வழித்தடங்களில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு பேருந்துகளில், படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தாக பயணம் செய்கின்றனர். எனவே, கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்.வண்டலுார் ஏரிக்கு வரும் நீர்வாரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும். பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளால், 50 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர்.அதன் பின், ஏரிகளில் மண் எடுக்கப்படுவதை, கனிமவள அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கூடுதல் நெல் அறுவடை இயந்திரம் வாங்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். விவசாயிகள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அருண்ராஜ் விவசாயிகளிடம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி