உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேலக்கண்டையில் தேங்கியுள்ள 3,000 மூட்டை நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

மேலக்கண்டையில் தேங்கியுள்ள 3,000 மூட்டை நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

பவுஞ்சூர், மேலக்கண்டை ஊராட்சியில், 3,000 மூட்டை அளவிற்கு நெல் தேங்கியுள்ளதால், நெல் கொள்முதல் நிலையம் துவக்க வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மதுராந்தகம் ஒன்றியம், ஜமீன் எண்டத்துார் குறுவட்டத்திற்கு உட்பட்ட மேலக்கண்டை, கீழக்கண்டை, முருகம்பாக்கம், அத்திவாக்கம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், 7,000 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல், தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சம்பா மற்றும் சொர்ணவாரி பருவத்தில் மேலக்கண்டை ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தாண்டு சொர்ணவாரி பருவத்திற்கு, மேலக்கண்டை ஊராட்சியில் தற்போது வரை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை. ஆனாலும், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை, ஆண்டுதோறும் நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் இடத்தில் கொட்டி வருகின்றனர். தற்போது வரை, 3,000 மூட்டை நெல், இந்த இடத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், சொர்ணவாரி பருவத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில், 46 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்த உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதில், ஆண்டுதோறும் செயல்பட்டு வந்த மேலக்கண்டை நெல் கொள்முதல் நிலையம் விடுபட்டு உள்ளதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க முடியாமல், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். நெல்லை பாதுகாக்க இடவசதி இல்லாத விவசாயிகள், தங்களது நெல்லை விற்பனை செய்ய, குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் தனியார் வியாபாரிகளை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்தாண்டு சொர்ணவாரி பருவத்திற்கு, மேலக்கண்டை ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். * மழையில் நனைந்த நெல் திருப்போரூர் ஒன்றியத்தில் சிறுங்குன்றம், முள்ளிப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், நெல் அறுவடை செய்த விவசாயிகள், அந்தந்த பகுதிகளில் செயல்பட உள்ள நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில், விற்பனைக்கு முன்கூட்டியே நெல்லை கொட்டி வைத்தனர். கடந்த இரண்டு நாட்களாக, இரவில் திடீரென மழை பெய்தது. இதனால், நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்ட இடங்களில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் நனைந்தது. ஆனாலும், முடிந்தவரை தார்ப்பாய் போட்டு, நெல்லை பாதுகாத்து வருகின்றனர். எனவே, இங்கு குவிக்கப்பட்டுள்ள நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ