கொள்முதல் நெல்லுக்கு பணம் வழங்காததால் - லாரியை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், அனந்தமங்கலம் ஊராட்சியில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் வழங்காததால், நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரியை சிறைபிடித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு, மத்திய அரசின் கொள்முதல் நிலையங்கள், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் என 130க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு, கடந்த 100 நாட்களுக்கு மேலாக, விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படாததால், விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இதனால், ஒரு லட்சம் ரூபாய்குள் நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, தற்போது அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.அத்துடன், மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்த பகுதிகளை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் கையகப்படுத்தி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். அவ்வாறு, அனந்தமங்கலம் ஊராட்சியில், கடந்த 15 நாட்களாக, தமிழ்நாடு அரசு நுகர்வு பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக, பதிவு செய்து காத்திருந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து, 40 கிலோ எடை கொண்ட 9,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இறுதியாக, நேற்றுடன், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி முடிவுற்றது.இந்நிலையில், அனந்தமங்கலத்தில் மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தபோது, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்காமல், மீதமுள்ள நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல, லாரி வந்துள்ளதை அறிந்த அப்பகுதி விவசாயிகள், லாரியை மடக்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:அனந்தமங்கலத்தில் மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு, நுாறு நாட்களுக்கும் மேலாக, விவசாயின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படாமல் உள்ளது.அதனால், விவசாயிகளின் பணத்தை உடனடியாக விடுவிக்க கோரி, நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல வந்த லாரியை பறிமுதல் செய்துள்ளோம். விவசாயின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டால் லாரியை விடுவிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.