நெல் விற்ற தொகை கிடைக்காததால் மதுராந்தகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மதுராந்தகம்:மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும், மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் வாயிலாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்காததால், மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டாரத்தில், மத்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையும் வாயிலாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக, விவசாயிகளின் வங்கி கணக்கில், பணம் வரவு வைக்கப்படாமல் உள்ளது.அதனால், கடன் வாங்கி உழவு பணிகள் மேற்கொண்ட விவசாயிகள், மேலும் கடனில் தத்தளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.அதனால் நேற்று, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின், கோட்டாட்சியர் அலுவலகத்தை, திடீரென முற்றுகையிட முயன்றனர்.அதனால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் விவசாயிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மதுராந்தகம் பொறுப்பு வட்டாட்சியர் ராஜேஷ் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ஆகியோர், விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர்.பின், விவசாயிகள் அனைவரையும் மதுராந்தகம் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலை விடுவித்தனர்.