நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு விவசாய நலச்சங்கம் குற்றச்சாட்டு
செங்கல்பட்டு:நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடந்துள்ளதாக, விவசாய நலச்சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர்.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:மாவட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தரமாக அமைக்க வேண்டும். பாலுார் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பாலுார் பகுதி மின்வாரிய அலுவலக பகுதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளதை, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும். வண்டலுாரில், விவசாய நிலங்களுக்கு செல்லும் பகுதியை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்டுத்தர வேண்டும். மதுராந்தகம் ஏரி பணியை உடனடியாக முடிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.கலெக்டர் அருண்ராஜ் பேசுகையில்,''மாவட்டத்தில் நெற்களங்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் செயல்படுத்த, ஊரக வளர்ச்சித் துறையும், பாசன கால்வாய்களை துார்வாரி சீரமைக்க, நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். மதுராந்தகம் ஏரி பணியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.முறைகேடு
நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நடத்தப்படுகிறது. இந்நிலையத்தில் முறைகேடு நடந்துள்ளது. சம்பா, சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட, 14.75 லட்சம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன. இதில், 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு
10 ரூபாய் என, மொத்தம் கூலித்தொகை 38.83 லட்சம் ரூபாயை அரசு வழங்கியது. விவசாயிகளிடம் கட்டாய கூலியாக, 27.15 கோடி ரூபாய் முறைகேடாக வசூலிக்கப்பட்டு உள்ளது.இதை விவசாயிகளிடம் திருப்பி வழங்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசியல் தலையீடு இல்லாமல், அரசு அதிகாரிகள் நடத்த வேண்டும்.- வெங்கடேசன்,விவசாய நலச்சங்க தலைவர், செங்கல்பட்டு மாவட்டம்