உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜி.எஸ்.டி., சாலையில் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்

ஜி.எஸ்.டி., சாலையில் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்

குரோம்பேட்டை:ஜி.எஸ்.டி., சாலையில், கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட நேரத்தில், தடையை மீறி நுழைந்த வாகனங்களை, போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.கிண்டி முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலை, ஆறுவழிச் சாலையாகும். தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், சென்னைக்குள் நுழைய முக்கிய சாலையாக விளங்குவதால், 24 மணி நேரமும் போக்குவரத்து காணப்படுகிறது.நெரிசல் மற்றும் விபத்தை கருத்தில் கொண்டு, காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும், பெருங்களத்துாரில் இருந்து தாம்பரம் வழியாக கனரக வாகனங்கள், ஜி.எஸ்.டி., சாலைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தடை உத்தரவு அமலில் இருந்தாலும், நாள்தோறும் ஏகப்பட்ட வாகனங்கள், போக்குவரத்து போலீசாரை சரிக்கட்டிவிட்டு, ஜி.எஸ்.டி., சாலை வழியாக செல்கின்றன. அதனால், அவ்வப்போது விபத்துகளும் நெரிசலும் தொடர்ந்து வந்தன.போக்குவரத்து போலீசார், அவ்வப்போது அத்துமீறி நுழையும் வாகனங்களை மடக்கி, அபராதம் விதிப்பதும் நடக்கிறது. அந்த வகையில், தடை விதிக்கப்பட்ட நேரத்தில் ஜி.எஸ்.டி., சாலை வழியாக குரோம்பேட்டைக்குள் நேற்று காலை நுழைந்த கனரக வாகனங்கள் மடக்கப்பட்டன.அவற்றில், வேன், டிப்பர் லாரி உள்ளிட்ட 14 கனரக வாகனங்களுக்கு, போக்குவரத்து உதவி கமிஷனர் ராஜன், குரோம்பேட்டை சப் - இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார், 25,000 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி