மீனவ பகுதிகள் எல்லை கோர்ட் வழக்கால் அளவீடு
புதுப்பட்டினம், கல்பாக்கம் மீனவ பகுதிகள் எல்லை விவகாரம் தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வழக்கால், வருவாய்த் துறையினர் நேற்று அளவிட்டனர்.புதுப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட மீனவர் பகுதியும், வாயலுார் ஊராட்சிக்கு உட்பட்ட உய்யாலிகுப்பம் மீனவர் பகுதியும் அருகருகே உள்ளன.இவ்விரு பகுதிகளின் எல்லையில் உள்ள புதுப்பட்டினம் ஊராட்சியைச் சேர்ந்த தெருவில், சில மாதங்களுக்கு முன், ஒன்றியக் குழு நிதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.கிழக்கு மேற்காக உள்ள இத்தெருவில், வடக்கு தெற்காக அமைந்த மற்றொரு தெரு இணைகிறது. அதிலும் கான்கிரீட் சாலையை நீட்டிக்க முயற்சிக்கப்பட்டது. அதன் குறிப்பிட்ட நீள பகுதி, உய்யாலிகுப்பம் பகுதிக்கு உட்பட்டதாகக் கூறி, அப்பகுதி மீனவர்கள் சாலை அமைக்க விடாமல் தடுத்து, பணியை நிறுத்தினர்.இதுதொடர்பாக, இரண்டு தரப்பினரும் போராட்டம் நடத்தி, மாவட்ட கலெக்டர் அருண்ராஜிடம் முறையிட்டனர்.இதையடுத்து, இரண்டு பகுதி எல்லை விவகாரம் குறித்து, சப் - கலெக்டர் நாராயண சர்மா, கடந்த நவம்பரில் இரண்டு தரப்பினரிடமும் விசாரித்தார். பின், எல்லைப் பகுதியை அளவிட்டு வரையறுக்க, திருக்கழுக்குன்றம் தாசில்தாரிடம் அறிவுறுத்தினார். ஆனால், அரசியல் தலையீடு காரணமாக, தாலுகா நிர்வாகத்தினர் தொடர்ந்து தவிர்த்ததாக கூறப்பட்டது.இதையடுத்து, எல்லை விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண, உய்யாலிகுப்பம் மீனவர் சபை தரப்பில், செங்கல்பட்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்நிலையில் நேற்று, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா மேற்பார்வையில், இரண்டு பகுதிகளின் பரப்பு, எல்லையை அளவிட்டனர். எல்லையை வரையறுத்து கற்கள் நட இருந்த நிலையில், வருவாய்த் துறையினர் கற்கள் நடவில்லை. இதனால், இந்த சர்ச்சை தொடர்வதாக உய்யாலிகுப்பம் மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.