உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முதியோருக்கான இலவச பஸ் பாஸ் திட்டம் திருப்போரூர் பகுதிக்கு விரிவுபடுத்த எதிர்பார்ப்பு

முதியோருக்கான இலவச பஸ் பாஸ் திட்டம் திருப்போரூர் பகுதிக்கு விரிவுபடுத்த எதிர்பார்ப்பு

திருப்போரூர்:முதியோருக்கான இலவச,'பஸ் பாஸ்' திட்டத்தை, சென்னையை ஒட்டியுள்ள திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிக்கு விரிவுபடுத்த வேண்டுமென, மூத்த குடிமக்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 12 சதவீதத்திற்கு மேல் முதியோர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.இதை கருத்தில் கொண்டு, 2011ம் ஆண்டு அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், மூத்த குடிமக்களுக்கு 'இலவச பஸ் பாஸ் டோக்கன்' அறிவிப்பு வெளியிடப்பட்டது.முதல்கட்டமாக சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும், மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை, 2016 பிப்ரவரியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். தற்போது இந்த திட்டத்தில், சென்னை மாநகர எல்லை மற்றும் சென்னை அஞ்சல் குறியீடு எண் உள்ள பகுதிகளில் வசிக்கும் முதியோருக்கு மட்டும், இலவச பஸ் பாஸ் டோக்கன் வழங்கப்படுகிறது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மாநகர பேருந்து சேவை, திருப்போரூர் சட்டசபை தொகுதியில் அடங்கிய ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலையில் திருப்போரூர் தாண்டி, மாமல்லபுரம் வரை இயக்கப்படுகிறது. அதேபோல், மற்ற முக்கிய சாலைகளிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இப்பகுதிகளுக்கு முதியோருக்கான இலவச பஸ் பாஸ் திட்டம் விரிவுபடுத்தப்படவில்லை.இதுகுறித்து முத்த குடிமக்கள் சென்னை அடையாறு, திருவான்மியூர், சைதாப்பேட்டை போன்ற பணிமனை மையங்களில் சென்று கேட்கின்றனர்.அப்போது, சென்னை மாநகர எல்லை அல்லது சென்னை அஞ்சல் குறியீட்டு எண் உள்ள பகுதியில் வசிப்போருக்கு மட்டுமே வழங்க முடியும் என, வாய்மொழியாக கூறப்படுகிறது.இதனால், கிராமப்புற முதியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, இலவச பஸ் பாஸ் திட்டத்தை, திருப்போரூர் சுற்றியுள்ள மாநகர பேருந்துகள் இயங்கும் பகுதிகள் முழுதும் விரிவுபடுத்த வேண்டும் என, மூத்த குடிமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை