உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காயரம்பேடு, பெருமாட்டுநல்லுாரில் அடிக்கடி மின் தடையால் தவிப்பு

காயரம்பேடு, பெருமாட்டுநல்லுாரில் அடிக்கடி மின் தடையால் தவிப்பு

கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், கூடுவாஞ்சேரி நகராட்சி அடுத்து காயரம்பேடு, பெருமாட்டுநல்லுார் ஆகிய இரு ஊராட்சிகள் உள்ளன.காயரம்பேடு ஊராட்சி, 114.5 ஹெக்டேர் பரப்பில் உள்ளது. இங்குள்ள 9 வார்டுகளில், 187 தெருக்களில், 3,002 வீடுகள் உள்ளன. 8,500க்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர்.பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில், 16 சதுர கி.மீ., பரப்பில், 9 வார்டுகளில், 6,840 வீடுகளில், 13,800 நபர்கள் வசிக்கின்றனர்.இவ்விரு ஊராட்சிகளிலும் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக, பகுதிவாசிகள் தொடர் புகார் எழுப்பி வருகின்றனர்.இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:கோடை காலம் துவங்கிவிட்டாலே, தினமும் அறிவிக்கப்படாத மின் தடையை சந்திக்க நேரிடுகிறது. இதனால், டி.வி., பிரிஜ், மின்விசிறி உள்ளிட்ட சாதனங்கள் பழுதடைவது வாடிக்கையாகி விட்டது. தவிர முதியோர், குழந்தைகள் பெரும் அவதிப்படுகின்றனர்.நேற்று காலை 6:30 மணி முதல் 10:15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. காரணம் அறிய, மின்வாரிய அலுவலகத்திற்கும், உதவி செயற்பொறியாளருக்கும் தொடர்பு கொண்ட போது, பதில் ஏதும் இல்லை.எனவே, மின்வாரிய உயர் அதிகாரிகள் இவ்விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி, மின் தடை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவிர, மின்தடைக்கான காரணம் குறித்து கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு, உரிய பதில் அளிக்கும்படி, கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !