மீண்டும் நிரம்பியது குப்பை கிடங்கு ஊரப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
ஊரப்பாக்கம்,:ஊரப்பாக்கம் ஊராட்சியில், 15 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர்.ஊராட்சி முழுதும் நாள் ஒன்றுக்கு 30 டன் எடை அளவிற்கு சேகரிக்கப்படும் குப்பை, காரணை புதுச்சேரி சாலையில் உள்ள, ஒரு ஏக்கர் பரப்புள்ள கிடங்கில் தேக்கப்பட்டு, அங்கிருந்து, மாதம் ஒரு முறை, ஆப்பூர் குப்பை கிடங்கிற்கு லாரிகள் வாயிலாக எடுத்து செல்லப்படுகிறது.மாதம் ஒருமுறை நிரம்பும் குப்பை கிடங்கு இம்முறை 15 நாட்களில் நிரம்பி விட்டது. இதனால், ஊராட்சி முழுதும், குப்பை வண்டிகளில் சேகரித்து, பல தெருக்களில் இருந்து எடுத்து வரப்படும் குப்பையை, கிடங்கின் உள்ளே கொட்ட முடியவில்லை.இதனால் நேற்று முதல், கிடங்கிற்கு வெளியே, சாலையில் குப்பையை கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால், சாலை முழுதும் குப்பை தேங்கி, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு, பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு பரவும் நிலை எழுந்துள்ளது.எனவே, கிடங்கில் நிரம்பியுள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை, லாரிகள் வாயிலாக ஆப்பூர் கொண்டுசெல்ல, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிரந்தர தீர்வாக, ஊருக்கு வெளியே, புதிய குப்பை கிடங்கு அமைக்கவும் மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.