உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை மாவட்ட பிரதான சாலைகளில் ராட்சத விளம்பர பேனர்கள் அதிகரிப்பு

செங்கை மாவட்ட பிரதான சாலைகளில் ராட்சத விளம்பர பேனர்கள் அதிகரிப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தின் பிரதான சாலைகளில், புதிது புதிதாக முளைக்கும் ராட்சத விளம்பர 'பேனர்'கள், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவதால், விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கணிசமான 'வருமானம்' வருவதால், இவற்றை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வருவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணையில், 2019, செப்., 12ல், தனியார் நிறுவன பெண் ஊழியர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, சாலை நடுவே வைத்திருந்த விளம்பர பேனர் காற்றில் சரிந்து, அவர் மீது விழுந்தது.இதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்த போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி உயிரிழந்தார்.இதையடுத்து, தமிழகம் முழுதும் சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை அகற்ற அரசு உத்தரவிட்டது. தவிர, 'உரிய அனுமதி பெறாமல் விளம்பர பேனர், டிஜிட்டல் போர்டு வைக்கக் கூடாது' என நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், அடுத்த சில மாதங்களில், நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு, மெல்ல மெல்ல பேனர் கலாசாரம் மீண்டும் தலைதுாக்கி, இப்போது புற்றீசல் போல் பேனர்கள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளன.அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் பிரதான வழித்தடங்களாக உள்ள ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் -- கேளம்பாக்கம், ஓ.எம்.ஆர்., சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் உள்ளிட்ட சாலைகளில், பல டன் எடையில், 500க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்கள், விதிமுறைகளை மீறி, உரிய அனுமதியின்றி சாலை ஓரமாகவும், கட்டடங்கள் மீதும் வைக்கப்பட்டு உள்ளன.இந்த ராட்சத விளம்பர பேனர்களால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறடிக்கப்பட்டு, அடிக்கடி விபத்து நிகழ்கிறது.தவிர, விளம்பர பேனர்களை தாங்கிப் பிடிக்கும் பல டன் எடையுள்ள இரும்பு கம்பிகளும், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.இது குறித்து மாவட்ட ஆட்சியர், நகராட்சி கமிஷனர்களிடம் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளம்பர பேனர்களை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதிகாரிகளுக்கு, மாதம்தோறும் கணிசமான 'வருவாய்' கிடைத்து வருவதால், இவ்விஷயத்தில் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நொறுக்கு தீனி உற்பத்தியாளர்கள், மருத்துவமனைகள், காப்பீடு நிறுவனங்கள், ஐஸ்கிரீம் நிறுவனங்கள் என, செங்கல்பட்டு மாவட்டத்தின் பிரதான சாலைகளின் இருபுறமும், 500க்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.இந்த விளம்ப பேனர்களால், கவனம் ஈர்க்கப்படும் வாகன ஓட்டிகள், முன்னே செல்லும் வாகனங்களோடு மோதுவதும், சாலையில் சறுக்கி விழுந்து காயமடைவதும் தினமும் நடக்கிறது. தவிர விபத்தில் சிக்கி, வாகன ஓட்டிகள் உயிரிழப்பதும் அடிக்கடி நடக்கிறது.தவிர, காற்று பலமாக வீசும் போதும், உறுதித்தன்மை இழக்கும் போதும், இந்த விளம்பர பேனர்கள் அடியோடு சாய்ந்து கீழே விழவும் அதிக வாய்ப்புண்டு.இதுபோன்ற நிகழ்வுகளால், தினமும் 10 இடங்களிலாவது கைகலப்பு, வாய்த்தகராறு நிகழ்கிறது. தவிர, சிறு சிறு விபத்துகளும் தாராளமாய் நடக்கின்றன. மேலும், பெரும் விபத்தில் சிக்கி, உயிர் பலியும் மாதம்தோறும் நிகழ்கிறது.நெடுஞ்சாலை ஓரமாகவும், கட்டடங்கள் மேல் பகுதியிலும் விளம்பர பேனர் அமைப்பதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும்.தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தின் பிரதான சாலைகளில் முளைத்துள்ள புதுப்புது ராட்சத பேனர்கள் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.பல இடங்களில் தனியார் கட்டடங்களின் மீது, 10 டன் எடையுள்ள ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம், தமிழக நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து காவல் துறை, ஊராட்சி நிர்வாகம் உரிய அக்கறையுடன் செயல்பட்டு, வாகன ஓட்டிகளின் உயிரோடு விளையாடும் ராட்சத விளம்பர பேனர்களையும், அதை தாங்கிப் பிடிக்க அமைக்கப்பட்ட பல டன் எடையுள்ள இரும்பு கம்பிகளையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவிர, அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களில் அனுமதி எண், வரையறுக்கப்பட்ட காலம், விளம்பர பேனரின் நீளம் மற்றும் அகலம், மொத்த எடை உள்ளிட்ட விபரங்களைக் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல்வாதிகள் ஆதரவு

புறநகர் பகுதிகளான பொத்தேரி, காட்டாங்கொளத்துார், மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஜி.எஸ்.டி., சாலை, அனுமந்தபுரம் சாலை, ஸ்ரீ பெரும்புதூர் சாலை, செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி தொடர்ந்து பேனர்கள் வைக்கப்படுகின்றன.நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலை ஓரம் உள்ள கட்டங்களின் மீது சினிமா, அரசியல், கல்வி நிறுவனங்கள், வணிகர் சங்க பேனர்கள் உள்ளிட்ட விளம்பர பேனர்கள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற பேனர்களை உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவு பெற்ற நபர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் வைப்பதால், உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டும்காணாமல் இருந்து வருகின்றன.

தலைவலி

கோவில் விழா, திருமணம், பிறந்தநாள், காது குத்துதல், தலைவர்கள் பிறந்தநாள், அரசியல் கட்சி பொதுக் கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என, ஒவ்வொரு நிகழ்விற்கும் பேனர்கள் வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது.பிரதான சாலையில் மட்டுமின்றி, உட்புற சாலைகளிலும் விதிமீறி வைக்கப்படும் இந்த பேனர்கள், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி, விழாக்கள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் அகற்றப்படுவதில்லை. இது, பொதுமக்களுக்கு தலைவலியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி