பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய பகுதிகளில், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் உள்ளன. இந்த ஒன்றிய பகுதிகளில் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், 'மால்'கள், திரையரங்குகள் அதிக அளவில் உள்ளன.சுற்றுச்சூழலை பாதிக்கும், 40 'மைக்ரானுக்கும்' குறைவான பாலித்தீன் பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழகத்தில் தடை உள்ளது. அதன்படி பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.இதனால், பிரதான வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு வெகுவாக குறைந்தது. அதற்கு மாற்றாக, இயற்கை தயாரிப்புகள் விற்பனை அதிகரித்துள்ளது. பாக்கு மட்டைத் தட்டுகள், பேப்பர் கப், மந்தாரை இலை போன்றவை பயன்படுத்தப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வாக அமைந்தது.ஆனால், நாளடைவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் பிளாஸ்டிக் சோதனைகள், அபராதம் விதித்தல் போன்றவை குறைந்துவிட்டன.இதனால் நாவலுார், படூர், கேளம்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில், மீண்டும் ஹோட்டல்கள், பழக்கடைகள், காய்கறி கடைகள் போன்ற கடைகளில் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால், பிளாஸ்டிக் குப்பை கழிவுகளும் அதிகரித்து, சாலை ஓரங்களில் குவிந்து கிடக்கின்றன.எனவே, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகமும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும், மீண்டும் திடீர் பிளாஸ்டிக் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.