பார்க்கிங் பகுதியான ஜி.எஸ்.டி., சாலை போக்குவரத்து போலீசார் அலட்சியம்
செங்கல்பட்டு,:ஜி.எஸ்.டி., சாலையை ஆக்கிரமித்து, திம்மாவரத்தில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் கிராமத்தில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக சாலை அமைக்கப்பட்டது.இச்சாலையின் அணுகு சாலையில், இருபுறம் லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் வரிசைகட்டி நிறுத்தப்படுகின்றன. இதனால், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள், சாலையின் மையப்பகுதியில், விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இவ்வழியாக இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது மோதி, விபத்துக்களில் சிக்குகின்றனர்.இதனால், பலர் படுகாயமடைந்து உள்ளனர். இப்பகுதியில் பெரிய விபத்துக்கள் நடந்து உயிரிழப்பு ஏற்படும் முன், சாலையில் அணிவகுத்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த, போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.