நின்னக்கரை ஏரியில் கலக்கும் ரசாயன கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
மறைமலை நகர்:மறைமலை நகர், நின்னக்கரை ஏரியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மறைமலை நகர், சிப்காட் அண்ணா சாலையில், வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுத் தன்மை கொண்ட ரசாயன கழிவுநீர், மழைநீர் வடிகால்வாய் வழியாக, மறைமலை நகர் நின்னக்கரை ஏரியில் விடப்பட்டு வருகிறது. இந்த ரசாயன கழிவுநீரை, சுத்திகரிப்பு செய்யாமல் ஏரியில் விடுவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: சிப்காட் அண்ணா சாலையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீர் அண்ணா சாலை, கம்பர் தெருவில் உள்ள கால்வாய் வழியாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஏரியில் கலக்கிறது. தொழிற்சாலைகளில் பெயரளவிற்கு மட்டுமே, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ரசாயன கழிவுநீரால், நிலத்தடி நீர் மாசுபட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நின்னக்கரை ஏரியில் கிணறு அமைத்து, இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ரசாயன கழிவுநீர் கலப்பதால், மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ரசாயன கழிவு நீரை நீர்நிலைகளில் விடும் தொழிற்சாலைகள் மீது, நகராட்சி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.