உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை மாவட்டத்தில் கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

செங்கை மாவட்டத்தில் கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழையால், பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. திருப்போரூர் ஒன்றியம், பொன்மார் ஊராட்சியில் அடங்கிய பிரம்ம சக்தி நகர், தனலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். நேற்று இப்பகுதிகளை, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் மற்றும் அப்பகுதி ஊராட்சி தலைவர் நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி பாஸ்கர் ராவ், பூமகள் தேவி ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து, 'பொக்லைன்' இயந்திரம் மற்றும் மின் மோட்டார்களை பயன்படுத்தி மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டனர். மூழ்கிய தரைப்பாலம் சிங்கபெருமாள் கோவில் -- பாலுார் சாலை, 13 கி.மீ., துாரம் கொண்டது. காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலையான இச்சாலையை பாலுார், வெண்பாக்கம், ரெட்டிபாளையம், கரும்பாக்கம், குருவன்மேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில், வெண்பாக்கம் -- ரெட்டிபாளையம் இடையே, தென்னேரி ஏரி உபரி நீர் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரி நீர் செல்லும் நீஞ்சல் மடுவு கால்வாய் இடையே தரைப்பாலம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில், இந்த தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிக்கவே, இந்த தரைப்பாலம் மூழ்கி, 4 அடி உயரம் வரை வெள்ள நீர் செல்கிறது. இதனால், போலீசார் தரைப்பாலத்தின் இருபுறமும் இரும்பு தடுப்புகளை அமைத்து, வாகன ஓட்டிகளை மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தினர். இதனால், கிராம மக்கள் பல கி.மீ., துாரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. நெல் நாசம் திருப்போரூர் ஒன்றியத்தில் முள்ளிப்பாக்கம், சிறுங்குன்றம், பெரிய இரும்பேடு உள்ளிட்ட பகுதிகளில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு வரை விட்டு விட்டு கனமழை பெய்தது. இதில், நெல் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. குறிப்பாக, முள்ளிப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள், மழையில் நனைந்து முளைத்து வீணாகி உள்ளன. இது, விவசாயிகளுக்கும் அரசுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை