சிங்கபெருமாள் கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல்
மறைமலை நகர்:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தென்மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாட கடந்த 13ம் தேதி முதல் சென்றனர். பொங்கல் விடுமுறை முடிந்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் திறக்கப்பட உள்ளதால் பலரும் நேற்று மாலை முதல் சென்னை திரும்பி வண்ணம் உள்ளனர். அதிக அளவில் பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னையை நோக்கி வருவதால் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்த பகுதியில் ஏற்கனவே ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பபடுவதாலும், மேம்பால பணிகள் நடை பெறுவதாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. தற்போது வாகனங்களின் வரத்து அதிகரித்தால் அனைத்து வாகனங்களும் 1 கி. மீ.,தூரம் வரை ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.