உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையை ஆக்கிரமிக்கு வாகனங்கள் செங்கை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

சாலையை ஆக்கிரமிக்கு வாகனங்கள் செங்கை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு::செங்கல்பட்டு நகரில், சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் தினமும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நெரிசலை தவிர்க்க, கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு நகராட்சி, மாவட்டத்தின் தலைநகராக அமைந்துள்ளது. இங்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட எஸ்.பி., அலுவலகம், முதன்மை மாவட்ட நீதிமன்றம், ரயில் நிலையம், மின்வாரிய அலுவலகம், அரசு சட்டக்கல்லுாரி, அரசு மருத்துவமனை போன்றவை உள்ளன.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு, ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் தலா ஒருவர் என, 16 போலீசார் நியமிக்கப்பட்டனர். இதில், மாற்றுப்பணிக்காக ஐந்து போலீசார், எஸ்.பி., - டி.எஸ்.பி., அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.பழைய, புதிய பேருந்து நிலையம், வேதாசலம் கல்லுாரி நுழைவாயில், ராட்டிணங்கிணறு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, புக்கத்துறை, படாளம் ஆகிய பகுதிகளில், போக்குவரத்து பணியில் குறைவான போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், செங்கல்பட்டு நகரில் வர்த்தக பகுதிகளில் கடைகள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் இருசக்கர வாகன நிறுத்தம் இல்லாததால், சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன.இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் மாவட்ட சிறை, பத்திர பதிவு அலுவலகங்கள் உள்ளன. இங்கு வருவோரின் வாகனங்கள், சாலையின் இருபுறம் ஆக்கிரமித்து, தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. பழைய பேருந்து நிலையத்திலிருந்து, ராட்டிணங்கிணறு வரையுள்ள சாலையின் இருபுறமும், வர்த்தக நிறுவனங்களுக்கு வருவோரின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில், போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி, மீண்டும் அங்கு நிறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.செங்கல்பட்டு நகரைச் சுற்றி உள்ள இடங்களில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன பெருக்கமும் அதிகரித்து உள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம், காவல் துறை இணைந்து நடைவடிக்கை எடுக்க வேண்டும்.- சி.எம்.சுரேஷ்,சமூக ஆர்வலர்,செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி