உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தீக்குளிக்க முயன்ற மனைவியை காப்பாற்றிய கணவருக்கு தீ காயம்

தீக்குளிக்க முயன்ற மனைவியை காப்பாற்றிய கணவருக்கு தீ காயம்

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ராஜேஸ்வரி நகரில் வசிப்பவர் ராஜ்குமார், 28. வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரின் மனைவி சந்தியா, 22. இவர்களுக்கு, ஒன்றரை மாத ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில், நேற்று குளியலறைக்கு சென்ற சந்தியா, திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்தபடி, வெளியே ஓடி வந்தார். இதை கண்ட ராஜ்குமார், அவரை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அவர் மீதும் தீப்பிடித்தது.அருகில் இருந்தவர்கள் தீகாயமடைந்த இருவரையும் மீட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில், சந்தியாவுக்கு 75 சதவீத தீக்காயமும், ராஜ்குமாருக்கு 50 சதவீத தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சந்தியா குழந்தை பிறப்புக்காக பெருங்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.அங்கு குழந்தை பிறந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில், நேற்று முன்தினம் இரவு, குழந்தையை பெற்றோர்களிடம் விட்டு விட்டு, கேளம்பாக்கம் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது, வீட்டில் இருந்த ராஜ்குமார், குழந்தை எங்கே என்று சந்தியாவிடம் கேட்டுள்ளார். அப்போது, குழந்தை இல்லாத தன் சகோதரிக்கு குழந்தையை கொடுத்து விடலாமா என, சந்தியா கூறியதாக தெரிகிறது.இதனால், இருவருக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட பிரச்னையால், சந்தியா பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டதும், காப்பாற்ற முயற்ற கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.போலீசார் வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை