வெளியம்பாக்கம் சாலையில் மண் சரிவு கான்கிரீட் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, வெளியம்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, வெளியம்பாக்கம், முருங்கை, கொங்கரை மாம்பட்டு, வடமணிப்பாக்கம், அனந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.இதில், வெளியம்பாக்கம் பகுதியில், 800 மீட்டர் துாரம் ஏரிக்கரையின் கீழே சாலை செல்கிறது. இந்த சாலையில், மழைக்காலங்களில் ஏரிக்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையில் மண் குவியல் ஏற்படுகிறது.இதன் காரணமாக, இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, ஏரிக்கரையில் மண் அரிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட பகுதிகளில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கக்கோரி, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தினர் மனு அளித்துள்ளனர்.ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, துறை சார்ந்த அதிகாரிகள், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.