வேதகிரீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி தினமும் லட்சார்ச்சனை நடைபெறுமா?
திருக்கழுக்குன்றம், அக். 19-திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், தனி சன்னிதியில் ஆறுமுக சுவாமியாக முருகப்பெருமான் வீற்றுள்ளார்.அவரை அருணகிரிநாதர் போற்றிப் பாடியுள்ளார். அவருக்கு, ஆண்டுதோறும் கந்தசஷ்டி உற்சவம், கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது. நீண்டகாலத்திற்கு முன், உற்சவம் நடத்தும் ஆறு நாட்களிலும், முருகனுக்கு காலை, மாலையில் லட்சார்ச்சனை நடத்தப்பட்டது.நாளடைவில் பக்தர்கள் வருகை குறைந்ததால், ஒரு நாள் மட்டும், ஏகதின லட்சார்ச்சனையாக நடத்தப்படுகிறது. தற்போதும், நவ., 2 - 7 தேதி வரை கந்தசஷ்டி உற்சவம் நடக்கவுள்ள நிலையில், இறுதிநாளான 7ம் தேதி, ஏகதின லட்சார்ச்சனை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பின், நவ., 2ம் தேதி, 3ம் தேதி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள், அரசு விடுமுறையாக உள்ளதால், வெளியூர் பக்தர்கள் வழிபாட்டிற்கு குவிவர் என எதிர்பார்ப்பு உள்ளது.எனேவே, பக்தர்கள் பங்கேற்கும் வகையில், ஆறு நாட்களிலும் லட்சார்ச்சனை நடத்த வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.