கல்பாக்கம் மீனவ பகுதிகள் எல்லை சர்ச்சை திருவிழா நடத்தாமல் தடுக்க நடவடிக்கை
புதுப்பட்டினம், கல்பாக்கம் மீனவ பகுதிகள் இடையே நிலவும் எல்லை பிரச்னையால், சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் திருவிழா, நிகழ்ச்சிகள் நடத்தாமல் பாதுகாக்குமாறு, கல்பாக்கம் போலீசாரிடம் மீன்வளத் துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.புதுப்பட்டினம் ஊராட்சியைச் சேர்ந்த மீனவ பகுதி மற்றும் வாயலுார் ஊராட்சியைச் சேர்ந்த உய்யாலிகுப்பம் மீனவ பகுதி ஆகியவை, அடுத்தடுத்து உள்ளன. இரண்டிற்குமான எல்லையில், புதுப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில், சில மாதங்களுக்கு முன், ஒன்றிய குழு நிதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.உய்யாலிகுப்பம் பகுதிக்கு உட்பட்டதாக கூறப்படும் கான்கிரீட் சாலையிலும், புதிய சாலையை நீட்டிக்க முயன்றதாகக் கூறி, அப்பகுதி மீனவர்கள் சாலைப் பணியை தடுத்து நிறுத்தினர்.இதில், இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜிடம் முறையிட்டனர். எல்லை விவகாரத்திற்கு, அப்பகுதியை அளவிட்டு தீர்வு காணுமாறு, கலெக்டர் உத்தரவிட்டார்.ஆனால், அரசியல் தலையீடு காரணமாக, தாலுகா நிர்வாகம் இதை தவிர்த்ததாக கூறப்பட்டது.எனவே, நிரந்தர தீர்வு கருதி உய்யாலிகுப்பம் மீனவர் சபை தரப்பில், செங்கல்பட்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணையில் உள்ளது.கடந்த 3ம் தேதி திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா மேற்பார்வையில், இரண்டு பகுதிக்குரிய பரப்பு, எல்லை வரையறை குறித்து அளவீடு செய்தும், எல்லை கற்கள் நடப்படவில்லை.இதற்கிடையே, சர்ச்சை பகுதியில் உள்ள ஊத்துக்காட்டம்மன் கோவிலில், நீண்ட காலமாக வழிபாடு நடத்தும் உய்யாலிகுப்பம் மீனவர்கள், கடந்த 11ம் தேதி, தைப்பூச பால்குட உற்சவத்திற்கு ஏற்பாடு செய்தனர்.அப்போது புதுப்பட்டினம் தரப்பினர், இவர்களை தகாத வகையில் திட்டி, உற்சவத்தை தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, புல எண் 208/4ல் உள்ள, உய்யாலிகுப்பம் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கான 4.74 ஏக்கர் இடத்தில் நடத்திய உற்சவ ஏற்பாட்டை, புதுப்பட்டினம் மீனவர்கள் தடுத்ததாக, மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது.இச்சூழலில், குறிப்பிட்ட புல எண்ணில் உள்ள 3.66 சென்ட் இடத்தை, மீன்வளத்துறை இயக்குநர் என்ற பெயரிலிருந்து, உய்யாலிகுப்பம் என்ற பெயருக்கு பட்டா பெயர் மாற்றுமாறு, உய்யாலிகுப்பம் மீனவர்கள் வலியுறுத்தினர்.இதைத் தொடர்ந்து, மீன்வளத் துறையினர், அத்துறை இயக்குநரிடம் இதுகுறித்த பரிந்துரையை அனுப்பி உள்ளனர். தற்போது, இந்த இடம் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளதால், அங்கு திருவிழா மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்தினால், மோதல் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, விழாக்கள் நடத்தாமல் பாதுகாக்குமாறு, கல்பாக்கம் போலீசாரிடம் கடிதம் அளித்து, மீன்வளத் துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.